மதிப்பிற்குரியவர்களுக்கு...
‘முடிந்தால் முயற்சி செய்... முடியாவிட்டால் பயிற்சி செய்’ என்பதே எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய வெற்றிக்கான ரகசியம். சிறந்த முயற்சி என்பது, இடைவிடாத பயிற்சியால் மட்டுமே சாத்தியம். நாம் எந்தத் துறையில் பணியாற்றினாலும், அந்தத் துறையில் எடுக்கும் இடைவிடாத பயிற்சி மட்டுமே நம்மை மேலும் மேலும் சாதனைகளைப் புரியவைக்கும்.
இசைஞானி இளையராஜா அவர்களின் திறமையைப் புகழாதவர்கள் யாருமே இருக்க முடியாது. நான்கு தலைமுறையினரைத் தனது இசைத்திறமையால் கட்டிப்போடுகிற இசைமேதையாக அவரை நன்கு அறிவோம். அவருடைய முதல் படமான ‘அன்னக்கிளி’ வெளியானபோது ரேடியோதான் பிரபலமான பொழுதுபோக்குச் சாதனம். தொலைக்காட்சி அப்போது கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்தால்கூடப் பெரிய விஷயம். ஆனால் ரேடியோ, ஏழை, பணக்காரர் என்ற
வித்தியாசமின்றி அனைவருக்குமான பொழுதுபோக்குச் சாதனமாக இருந்தது. அப்போது திரையிசைப் பாடல்களை, வேலை செய்துகொண்டே கேட்பது என்பது உழைக்கும் மக்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.
வித்தியாசமின்றி அனைவருக்குமான பொழுதுபோக்குச் சாதனமாக இருந்தது. அப்போது திரையிசைப் பாடல்களை, வேலை செய்துகொண்டே கேட்பது என்பது உழைக்கும் மக்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.
‘அன்னக்கிளி’ திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களுமே மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன. முதல் படம் என்பதால் அப்போது இளையராஜா யார் என்று மக்களுக்குத் தெரியாது. ஒருமுறை அவர் ஒரு தெருவில் நடந்து சென்றார். ‘அன்னக்கிளி உன்ன தேடுது’ என்கிற பாடலைத் தெருவின் ஒரு முனையில் நடக்கத் தொடங்கும்போது அறிவிப்புடன் வானொலியில் ஒலிபரப்பி இருக்கிறார்கள். அந்தத் தெருவைக் கடக்கச் சில நிமிடங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. அந்தத் தெரு முழுவதும் அந்த ஒரே பாடல் வெவ்வேறு வீடுகளின் வானொலிப் பெட்டிகள் வழியாக ஒலித்திருக்கிறது. தன் பாடலை ஒரே நேரத்தில் பல ரேடியோக்களில் கேட்டுக்கொண்டே இளையராஜா நடந்து சென்றதாகச் சொல்வார்கள்.
1976-ம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் தொடங்கிய இளையராஜாவின் இசை ராஜாங்கம், 45 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாகத் தொடர்கிறது. இசைத்துறையில் அவர் தொடர்ந்து மேற்கொண்ட இடைவிடாத பயிற்சியே இதற்குக் காரணம் என்று நிறைய இசைத்துறை ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு, அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களுடன் மேடைக் கச்சேரிகளில் ஊர் ஊராகச் சென்று ஆர்மோனியம் வாசித்தார். சென்னை வந்த பிறகு கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம் ஆகியவற்றை முறையாகக் கற்றுக்கொண்டார். கற்றுக்கொண்டதைத் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தார். அவருக்கான இசை வாய்ப்பு வந்தபோது திறம்படப் பயன்படுத்த இதுவே துணையாக இருந்தது. மெரினாக் கடற்கரையில் தனியாகச் சென்று இசைப்பயிற்சி மேற்கொண்ட அனுபவங்களை அவரே பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
எத்தனையோ இசையமைப்பாளர்கள் முதல் இரண்டு, மூன்று படங்களில் பெரிய வெற்றிபெற்றுப் பிறகு காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால், வெற்றி கிடைத்த பிறகும் இளையராஜா தன்னுடைய இசைப்பயிற்சியைக் கைவிடவில்லை. பாடல் பதிவு இருந்தாலும், இல்லாமல் போனாலும் இப்போதும் காலை ஏழு மணிக்கு இசைக்கூடத்திற்கு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
ஒரு திரைப்படத்திற்குப் பின்னணி இசையமைக்க இன்றைய இசையமைப்பாளர்கள் மூன்று மாதங்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இளையராஜா மூன்று நாட்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது இல்லை என்கிறார்கள். மற்றவர்களுக்கு மூன்று மாதம் தேவைப்படுகிற பணியைச் செய்ய இவருக்கு மூன்று நாட்கள் போதுமானதாக இருப்பதற்கு இளையராஜா அவர்கள் மேற்கொண்ட இடைவிடாத பயிற்சியே மிக முக்கியமானக் காரணம் என்று நினைக்கிறேன். மற்றவர்கள் செய்யும் அதே செயலை வேகமாகவும் நேர்த்தியாகவும் நீங்கள் செய்ய வேண்டுமென்றால், அதற்கு நீங்கள் தீவிரமாகப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
சச்சின் டெண்டுல்கரை ‘கிரிக்கெட் விளையாட்டின் கடவுள்’ என்று அனைவரும் கொண்டாடுகிறார்கள். மிக இளம் வயதிலேயே பாரத ரத்னா விருது வாங்கிய சாதனையாளர். வருடத்தின் சில நாட்கள் மட்டுமே கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறும் போட்டியில் வீரர்கள் விளையாடுவர். ஆனால், அதற்காக ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் விளையாடி, பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே சாதிக்க முடியும்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் ஈரப்பதம் மிகுந்த மைதானங்களில் பேட்டிங் செய்வது கடினம். இதற்காக, ஈரமான மைதானத்தில் பந்துவீசச் சொல்லி விசேஷப் பயிற்சி எடுத்திருக்கிறார் சச்சின். ‘மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக எங்களால் சிறப்பாக விளையாட முடியவில்லை’ என்று மற்றவர்கள் காரணம் சொல்லிக் கொண்டிருந்தபோது, ஈரப்பதம் மிகுந்த மைதானத்தில் சிறப்பாக விளையாடுவது எப்படி என்று பயிற்சி மேற்கொள்ளும் பண்பே சச்சின் வியத்தகு சாதனைகளைப் படைக்கக் காரணம்.
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதிகளிடம் நான் அடிக்கடி வலியுறுத்துகிற விஷயம் ஒன்று உண்டு. ‘நீங்கள் ஆர்டர் எடுக்கக் கடைகளுக்குப் போகிறபோது, உங்களை மதிப்புடன் வரவேற்பார்கள். தங்கள் குடும்பத்தினரைப் போல நம்மை அன்புடன் நடத்துவார்கள். அதற்குக் காரணம், நீங்கள் பெரிய நிறுவனத்தின் பிரதிநிதி என்பதால் அல்ல. தரமான பொருட்களைத் தயாரிக்கிற நிறுவனத்தின் பிரதிநிதி என்பதால்தான் மதிப்பு. இன்றைக்கு ராம்ராஜ் காட்டன் இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கலாம். ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன்பு மிகச்சிறிய நிறுவனம். ஆயிரக்கணக்கானவர்கள் இன்று வேலை செய்கிறார்கள். அன்று சிலர்கூட இல்லை. நம்மைவிடப் பெரிய பெரிய நிறுவனங்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், இன்றைக்கு இருக்கிற அதே மதிப்பு கொஞ்சமும் குறையாமல் 40 ஆண்டுகளுக்கு முன்பும் கிடைத்தது. காரணம், ராம்ராஜ் தயாரிப்புகளின் உயர்தரம்.
எவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைந்தபோதும், நாம் தயாரிக்கிற பொருளின் தரத்திற்காக நம்மை மதிக்க வேண்டும். நம் பொருளை நம்பி வாங்குபவர்களுக்கு நம்முடைய மதிப்பு என்னவென்று நன்கு தெரியும். அங்கு நாம் பேச வேண்டியதில்லை. நம் தயாரிப்புகளின் தரமே தேவையானதைப் பேசிவிடும். தரமற்ற பொருளைக் கொடுத்து விற்கச் சொன்னால் யாருமே முன்வர மாட்டார்கள். கொடுப்பவரை மதிக்கவும் மாட்டார்கள். வியாபாரத்தில் நமக்குக் கிடைக்கிற மதிப்பு என்பது, இத்தனை ஆண்டுகளாக நாம் உற்பத்தி செய்கிற பொருளின் தரம், நம்முடைய வியாபார நேர்மை ஆகியவற்றின் மூலம் கிடைப்பதாகும். நல்ல பெயர் எடுக்க தொடர்ந்து பாடுபடவேண்டும்’ என்பதே நான் குறிப்பிடும் விஷயம்.
‘சண்டை செய்வதற்கு நான் ஆயிரம்விதமான பயிற்சிகளை மேற்கொள்வதில்லை. மாறாக ஒரேவிதமான பயிற்சியை ஆயிரக்கணக்கான முறைகள் மேற்கொள்கிறேன்’ என்றார் தற்காப்புக்கலை வீரர்
புரூஸ் லீ. வெற்றிபெறக் கடுமையாக உழைக்க வேண்டுமென்றால், அந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். முயற்சி வெற்றி பெற அதிகமான பயிற்சி வேண்டும். பயிற்சி பலன்தர அதில் இடைவிடாத ஒரு தொடர்ச்சி வேண்டும். இம்மாத வெண்மை எண்ணங்கள் ‘பயிற்சி’ சிறப்பிதழ், பயனுள்ள இதழாக நிச்சயம் அமையும்.
புரூஸ் லீ. வெற்றிபெறக் கடுமையாக உழைக்க வேண்டுமென்றால், அந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். முயற்சி வெற்றி பெற அதிகமான பயிற்சி வேண்டும். பயிற்சி பலன்தர அதில் இடைவிடாத ஒரு தொடர்ச்சி வேண்டும். இம்மாத வெண்மை எண்ணங்கள் ‘பயிற்சி’ சிறப்பிதழ், பயனுள்ள இதழாக நிச்சயம் அமையும்.
வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்!
கே.ஆர்.நாகராஜன்
கே.ஆர்.நாகராஜன்
நிறுவனர் - ராம்ராஜ் காட்டன்