நேசித்து பல பயனுள்ள நூல்களைப் படித்து
வாசிப்பு ஏற்படுத்தும் நன்மைகளை உணர்ந்து
வளம் பெற்று வாழ்வில் உயர வழிகாட்டும்
வாசிப்பு சிறப்பிதழ்
என்ற இந்த இனிய நூலை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.
மதிப்பிற்குரியவர்களுக்கு...
வணக்கம்.
ஏன் ஒவ்வொருவரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும்? இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டு, ஒரு தொழில் முனைவோராக என்னுடைய பதில் என்னவென்று கேட்டார்கள். ‘வாசிப்பு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் சிறந்த முதலீடு’ என்று பதில் கூறினேன். ஒரு நல்ல புத்தகம் சிறந்த நண்பனைவிட மேலானது. ஏனெனில், நண்பர்கள் சூழ்நிலைக்கேற்ப மாறலாம். புத்தகம் ஒருபோதும் மாறாது.  
வீட்டில் பிள்ளைகள் பாடப் புத்தகம் அல்லாத வேறு புத்தகங்களைப் படித்தால், ‘ஏன் நேரத்தை வீணடிக்கிறாய்?’ என்று கேட்கிற பெற்றோர்கள் இருக்கிறார்கள். பாடப் புத்தகத்தை நன்றாகப் படித்தால் வாழ்வில் வேலைவாய்ப்புப் பெறத் துணையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரம், வெறும் பாடப் புத்தகங்களை மட்டுமே படித்தவர்கள், வாழ்வில் வரும் சோதனைகளை எதிர்கொள்ள இயலாமல் தடுமாறுகிறவர்களாக இருக்கிறார்கள். இதை ஆய்வுகள் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். 
ஏன் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதை நம் மதிப்பிற்குரிய அறிஞர்கள், சாதனையாளர்கள், சிந்தனையாளர்கள் பலரும் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்கள். தென்னாப்பிரிக்காவில் கருப்பின மக்களின் விடுதலைக்காகத் தன்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்த நெல்சன் மண்டேலா அவர்கள், வாழ்வின் பெரும்பகுதியைச் சிறையில் கழித்த மாபெரும் தலைவர். ‘‘புத்தகம் படிக்க அனுமதித்தால் போதும். எத்தனை ஆண்டுகளானாலும் பரவாயில்லை, சிறையில் இருக்கிறேன்'’ என்று அவர் கூறியிருக்கிறார். தன்னைச் சிறைப்படுத்தலாம், புத்தகங்களை வாசிக்கும் தன் சிந்தனைகளை யாரும் சிறைப்படுத்திவிட முடியாது என்கிற எண்ணம்தான் மண்டேலா அப்படிக் கூறக் காரணமாக அமைந்தது. 
இந்திய விடுதலைக்காகப் போராடியவர்கள் சிறைக்குச் செல்லும்போது, முதலில் அவர்களுக்குப் ‘புத்தக வாசிப்புதான்’ மறுக்கப்படும். பல தலைவர்கள் தங்களுடைய வாழ்க்கை வரலாற்றில் இதைப் பதிவு செய்திருக்கிறார்கள். தங்களிடம் இருந்த பீரங்கியைப் போன்ற ஆயுதங்களைவிட புத்தகங்கள் வலிமையானவை என்பதை வெள்ளையர்கள் அறிந்தே வைத்திருந்தனர்.

தனிமனித வாழ்வில் புத்தகங்கள் எத்தகைய மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதை, நமது மதிப்பிற்குரிய தலைமைச் செயலாளர் திரு. வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., அவர்கள் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். ‘மகத்தான வரலாறுகளை அறியவும், உன்னதமான மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், மானுடத்தின் போராட்டம் குறித்துப் புரிந்துகொள்ளவும் வாசிப்பது அவசியம். ஒரு நல்ல புத்தகம் அறிவுரை சொல்வதில் ஆசானாகவும், பாதுகாப்பளிப்பதில் பெற்றோராகவும், தோள் மீது கைபோட்டுக் கவலையைப் பகிர்ந்துகொள்வதில் தோழனாகவும் இருந்து நம்மை ஆற்றுப்படுத்தும்’ என்று புத்தகம் படிப்பதால் உண்டாகும் நன்மைகளைத் தன் அனுபவங்களின் வழியாக உறுதிப்படுத்துகிறார் இறையன்பு அவர்கள்.

என் வாழ்வில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மிகக் கருத்துகள் அடங்கிய புத்தகங்கள் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. ‘தொழில் செய்பவர்கள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கக்கூடாது. தொழில் வளர்ச்சி என்பது தனிமனிதரின் வளர்ச்சி மட்டுமல்ல, அது சமுதாயத்தின் வளர்ச்சியாக இருக்க வேண்டும்’ என்பதை அவருடைய புத்தகங்களின் மூலமாகவே உணர்ந்துகொண்டேன். அந்த வழியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் இந்தியா முழுவதும் ஒரு வெண்மை சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, பலரும் தொழில் செய்யத் தூண்டுகோலாக இருந்திருக்கிறது. 
நமது பண்பாட்டின் அடையாளமான வேட்டியை ஜவுளிக்கடைகளில் யாருடைய கண்ணுக்கும் படாமல் கீழ் அலமாரிகளில் அடுக்கிவைத்த நிலையை மாற்றி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேட்டியை மதிப்பிற்குரியவர்களின் அடையாளமாக மாற்றிக் காட்ட வேண்டும் என்கிற உயர்ந்த லட்சியத்தை வைத்தபோது லாபம் மட்டுமே நோக்கமாக மாறவில்லை. நெசவாளர்களின் வாழ்வை மேம்படச் செய்வது, வாடிக்கையாளர்களுக்கு மனநிறைவை அளிப்பது, சமுதாயத்தில் மாற்றம் நிகழ உழைப்பவர்களோடு கைகோர்த்து நின்று பொருளாதார உதவிகளைச் செய்வது என்று ராம்ராஜ் நிறுவனத்தின் லட்சியங்கள் பொறுப்புமிக்கவையாக உயர்ந்தன. இத்தகைய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டால் கடுமையாக உழைப்பது தவிர்க்க இயலாதது. உழைப்பு என்றுமே நம்மைக் கைவிடாது. வெற்றி தானாக வந்து சேரும்.

புத்தகங்கள் தரும் புதிய சிந்தனைகள், ஒரு தனிமனிதனுக்குள் விதையாக விழுகின்றன. அது நிறுவனம் என்கிற மாபெரும் விருட்சமாக கிளைகள் பரப்பிச் செழித்து வளர்கிறது. அதனால்தான், வாசிப்புப் பழக்கம் என்பது நம்முடைய சிறந்த முதலீடு என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். தியானம் செய்தால் வருகிற தெளிந்த மனநிலை, நல்ல புத்தகம் வாசிப்பதன் மூலம் உருவாகும். ஆழ்ந்து படிக்கும் திறன் கொண்டவர்களுக்கு நல்ல சிந்தனையும் செயல்திறனும் அதிகரிக்கும். 
சமூக ஊடகங்களில் அதிக நேரத்தைச் செலவழிக்கிற இளைய சமூகம், பாடப் புத்தகங்களைக் கடந்து வாழ்வை மேம்படுத்தும் நூல்களைப் படிக்க ஆர்வம் காட்டுவதில்லை. பயணங்களில் ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற இடங்களில் முன்பெல்லாம் நிறைய பேர் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். இப்போது இளைஞர்கள் மட்டுமின்றி எல்லா வயதினரும் செல்போன் ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டுத் தலைகவிழ்ந்த நிலையில் அதிலேயே மூழ்கிக் கிடைப்பதைப் பார்க்க முடிகிறது. தங்களைச் சுற்றி எத்தகைய மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைக்கூட பலர் பார்ப்பதில்லை.  
ஆரோக்கியமான உடல்நிலைக்கு ஒருமணி நேர உடற்பயிற்சியும், ஆரோக்கியமான மனநிலைக்கு ஒருமணி நேர வாசிப்பு பயிற்சியும் மேற்கொள்பவர்கள் ஒவ்வொருவரும் நிலையான செல்வந்தர்கள். பணமும் மற்றவையும் நிலையான செல்வங்கள் என்று கூறமுடியாது. ஆனால், ஆரோக்கியமான உடல்நிலையும், மனநிலையும் சிறந்த செல்வங்கள்.

அமெரிக்க நாட்டின் சிறந்த ஜனாதிபதி என்று வரலாற்றில் இடம்பெற்ற ஆபிரகாம்  லிங்கன் அவர்களிடம் ‘உங்கள் மனதுக்குப் பிடித்த ஓர் இடத்தின் பெயரைச் சொல்லுங்கள்’ என்று கேட்ட போது, ‘எப்போது நேரம் கிடைத்தாலும் நான் விரும்பிச் செல்லுமிடம் நூலகம்’ என்று கூறினார். கோயிலுக்கு அழைத்துச் செல்வது போலவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நூலகங்களுக்கு அழைத்துச் சென்று வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும். குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதைச் சொல்வதற்கு முன்பு பெற்றோர்களும் பெரியவர்களும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்திக் கொள்வது அவசியம். அப்போதுதான் அடுத்த தலைமுறையினருக்குச் சிறந்த முன்னுதாரணமாக நாம் இருக்க முடியும். 
வாடிக்கையாளர்களை வாசகர்களாக மாற்றும் உயர்ந்த லட்சியத்தோடு ராம்ராஜ் காட்டன் நிறுவனம் ‘வெண்மை எண்ணங்கள்’ மாத இதழை நான்கு மொழிகளில் நடத்துகிறது. ராம்ராஜ் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் அளிக்கிற விலைமதிக்க முடியாத பரிசுப்பொருள், நல்ல சிந்தனைகளை பத்திரிகையின் மூலம் அளிப்பதுதான். அதனால் நிறுவனத்திற்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் உறவு மேம்பட்டிருக்கிறது. உறவுகள் மேம்படவும் வாசிப்புப் பழக்கம் துணை செய்யும் என்பதை வெண்மை எண்ணங்கள் மூலம் உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தி இந்தச் சிறப்பிதழ் அமைந்திருக்கிறது. பயனுள்ள இதழாக, நீங்கள் பத்திரப்படுத்தி வாசிக்கிற இதழாக இம்மாத வெண்மை எண்ணங்கள் அமையும்.

வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்..! 
கே.ஆர்.நாகராஜன்
நிறுவனர் & ராம்ராஜ் காட்டன்
 

Enroll Now to our Newsletter

Get the latest news about our exciting products & initiatives and be always updated about what we do