வெண்மை கடிதம்-ஜூன்

வணக்கம்.

தேடல் இல்லாமல் போயிருந்தால், மனித இனம் மற்ற உயிரினங்களைத் தாண்டி இவ்வளவு தூரம் முன்னேறி இருக்காது. குழந்தையின் கண்கள் புதியனவற்றைத் தேடிக்கொண்டே இருக்கின்றன. கைகளும், கால்களும் தேடலின் நோக்கத்தில் எப்போதும் பரபரத்துக்கொண்டே இருக்கின்றன. குழந்தையின் ஒவ்வொரு முயற்சியும் தேடலின் தொடக்கம் என்றே சொல்லலாம். ‘தேடுங்கள் கண்டடைவீர்கள்’ என்கிற பைபிள் வாசகம், ஒன்றைக் கண்டடையத் தேடுவதின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, உழைப்பால் உயரத்தைத் தேடிக் கண்டடைந்த ஒரு தொழிலதிபருக்கு வாரிசு இல்லை. மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தைத் தனக்குப் பிறகு யார் நிர்வாகம் செய்யப் போகிறார்கள் என்கிற கேள்விக்குப் பதில் தேட விரும்பினார் அவர். சரியான பதிலைக் கண்டடையாமல் போனால், வாழ்நாள் முழுவதும் எதற்காக உழைத்தாரோ அதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று உணர்ந்தார்.

தலைமைப் பண்பு மிக்க ஊழியர்களை அழைத்தார். அனைவருமே அவரைப் போலச் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து உழைப்பால் உயர்ந்து, நிறுவனத்தில் முக்கிய இடத்தைப் பெற்றவர்கள். அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க நினைத்தார். எனவே, தலைமைப் பொறுப்புக்கு தகுதியுள்ளவர்களான 30 பேரைத் தன் அறைக்கு அழைத்தார்.

‘‘உங்களில் ஒருவர்தான் அடுத்த வருடம் இந்த மாபெரும் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்பீர்கள். உங்களில் யார் சிறந்தவர் என்பதைக் கண்டறிய
ஒரு போட்டி வைக்கிறேன். உங்கள் கைகளை நீட்டுங்கள்’’ என்றார். மகிழ்ச்சியை மறைத்துக்கொண்டு மதிப்புக்குரிய முதலாளி சொன்னபடி அனைவரும் கைகளை நீட்டினர். அவர்களிடம் ஆளுக்கொரு விதையை ஒப்படைத்தார். ‘‘இந்த விதை வீரியம் மிக்கது. இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் போட்டுத் தண்ணீர் ஊற்றி நன்றாகப் பராமரித்து வளர்க்க வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில், உங்களின் விதை எவ்வளவு செழிப்பாக வளர்ந்திருக்கிறது என்று பார்ப்பேன். மாதம்தோறும் விதையின் வளர்ச்சிக்கு நீங்கள் எடுத்த முயற்சி விவரங்களை என்னிடம் எழுத்துப்பூர்வமாக அளிக்க வேண்டும். இந்த விதையின் வளர்ச்சி பற்றி யாரும் யாரிடமும் பேசிக்கொள்ளக்கூடாது. என்னிடமும் இதைப் பற்றிப் பேசக்கூடாது. அப்படிப் பேசினால் வேலையைவிட்டு நீக்கப்படுவீர்கள்’’ என்று கூறினார்.

அனைவரும் மகிழ்ச்சியோடு விதையை எடுத்துக்கொண்டு சென்றனர். ‘ஒரு விதையால் தங்கள் ஒட்டுமொத்த எதிர்காலமும் மாறப்போகிறது’ என்று நம்பிக்கையுடன் அதை விதைத்தனர். ஊழியர்களின் குடும்பத்தினரும் விதை நன்றாக வளர வேண்டுமென்பதில் கவனம் செலுத்தினர்.

அவர்களில் ஒரே ஒருவனின் விதை மட்டும், என்ன உரம் போட்டுப் பராமரித்தாலும், எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் வளரவே இல்லை. விதை செழித்து வளர என்னென்ன முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று பல்வேறு நூல்களைப் படித்தும் ஒரு பயனுமில்லை.
இவன் மட்டும் அலுவலகத்தில் சோகமாக இருப்பதைப் பார்த்த மற்றவர்கள், இவன் விதை சரியாக முளைக்கவில்லை என்பதைச் சொல்லாமல் புரிந்துகொண்டனர். ஆனால், மற்றவர்களின் விதைகள் மிகச்சிறப்பாக வளர்வதை அவர்களின் மகிழ்ச்சியான நடவடிக்கைகள் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது.

ஒவ்வொருவரும் ‘நிறுவனத்தின் அடுத்த தலைமைப் பொறுப்புக்கு, தான் வந்துவிடுவோம்’ என்று நம்பிக்கையுடன் செயல்படுவது இவனுக்கு மன உளைச்சலை அளித்தது. தான் ராசியற்றவன் என்பதாகத் தன்னையே நொந்துகொண்டான். ‘ஒரு விதையை வளர்ப்பதும், ஒரு நிறுவனத்தை வளர்த்தெடுப்பதும் ஒரே விஷயமா? நிர்வாகம் சார்ந்து வேறு ஏதேனும் போட்டி வைத்திருந்தால் நான் நிச்சயம் முதல் நிலையில் இருந்திருப்பேன்’ என்று நினைத்துக்கொண்டான். ஆனாலும் முதலாளியைப் பற்றித் தவறாக நினைக்கவில்லை அவன்.

நாட்கள் ஓடின. அவனுடைய எந்த முயற்சிக்கும் பலன் இல்லை. ஆனால், முயற்சியை மட்டும் கைவிடாமல் தொடர்ந்து உரமும் நீரும் வார்த்தான். அதை ஆவணப்படுத்திக்கொண்டே வந்தான். பதினொன்றாம் மாதம் லேசாக அந்த விதை முளைக்கத் தொடங்கியது. ஆனால், ‘இந்நேரம் மற்றவர்களின் விதைகள் செடியாகிப் பூக்கத் தொடங்கியிருக்கும். இனி இது முளைத்து என்ன பயன்’ என்று அவனுக்கு சலிப்பு ஏற்பட்டது. ஆனாலும், அந்தச் செடியை வளர்ப்பதை நிறுத்தவில்லை.

ஒரு வருடம் முடிந்தது. அனைவரும் தாங்கள் நன்றாகப் பராமரித்து செழித்து வளர்ந்த செடிகளை முதலாளியிடம் காட்டுவதற்காகத் தொட்டியில் எடுத்து வந்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்புதான் முளைவிட்ட தன் செடியை முதலாளியிடம் காட்ட அவனுக்குக் கூச்சமாக இருந்தது. ஆனாலும் ஒரு வருடம், தான் விடாமுயற்சியுடன் செயல்பட்டதை விளக்கி, தன்னுடைய முயற்சியின் குறிப்புகளை முதலாளியிடம் ஒப்படைத்தான். மற்ற போட்டியாளர்களுக்கு அவனைப் பார்க்கச் சிரிப்பாக இருந்தது. ‘இவனைத் தவிர மற்ற எல்லோரும் செடிகளைச் சிறப்பாக வளர்த்திருக்கிறோம். இவர்களில் ஒருவரை நிறுவனத்தின் அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுப்பது சவாலான காரியம். எதையும் விரைந்து முடிவெடுக்கும் நம் முதலாளி, இதற்கு மட்டும் சில நாட்கள் எடுத்துக்கொள்வார்’ என்று மற்றவர்கள் பேசிக்கொண்டனர்.

ஆனால், விதைகளை வளர்த்த அனைவரையும் தன் அறைக்கு உடனே அழைத்தார் முதலாளி. நீண்ட நேரம் எடுக்காமல் பத்து நிமிடங்களில் கூட்டம் முடிந்தது. ‘11 மாதங்கள் வரை முளைக்காத விதையைச் சிறிய செடியாக வளர்த்து எடுத்து வந்தவரே நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை உடனடியாக ஏற்பார்’ என்று முதலாளி அறிவித்தார். அடுத்த நாளே பதவியேற்பு நிகழ்வும் உறுதியானது. அதைவிட அனைவருக்கும் அதிர்ச்சி அளித்த விஷயம், மற்ற 29 பேரையும் வேலையைவிட்டு நீக்குவதாக அறிவித்தார்.

‘நன்றாகச் செடியை வளர்த்த எங்களை ஏன் தண்டிக்கிறீர்கள்?’ என்று அவர்கள் கேட்க, முதலாளி தெளிவாகப் பதில் சொன்னார். ‘‘எந்தச் சவால் வந்தாலும் எதிர்கொண்டு நிறுவனத்தை வெற்றிப்பாதையில் அழைத்துப் போகிற தலைவரைத்தான் தேடினேன். அதற்காகவே ஒரு வருட காலம் எடுத்துக்கொண்டேன். பல்லாயிரக்கணக்கான ஊழியர்களின் உழைப்பில், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையில் கம்பீரமாக வளர்ந்து நிற்கும் இந்த நிறுவனத்தை உண்மையும், நேர்மையும் கொண்டு வழிநடத்துகிற ஒருவரைத்தான் இப்போது தேர்வு செய்திருக்கிறேன். எப்படி என்று கேட்கிறீர்களா? நான் 30 பேரிடமும் கொடுத்தது, 11 மாதங்கள் கழித்து வளர்கிற, அதுவும் 11 மாதங்களும் சிறந்த பராமரிப்பு கொடுத்துவந்தால் மட்டுமே வளர்கிற ரக விதைகள். நான் நம்பியவர்களில் ஒருவர் மட்டுமே அந்த விதையை முளைக்க வைக்கத் தேவையான வழிமுறைகளை ஒரு வருடமாகத் தேடித் தேடி செய்திருக்கிறார். மற்றவர்கள் நான் கொடுத்ததைப் போல வீரியமிக்க வேறு விதைகளை வாங்கி வளர்த்திருக்கிறார்கள்.

பதவி வருவதற்கு முன்பே உண்மையையும் நேர்மையையும் கைவிட்டவர்கள், நிறுவனம் நெருக்கடியாக இருக்கும் சமயத்தில் சுயநலமாக நடந்துகொள்வார்கள். இவர் மட்டுமே முயற்சியைக் கைவிடாமல் பல்வேறு சாத்தியங்களை ஆராய்ந்து விதையை முளைக்கச் செய்திருக்கிறார். நேர்மையாகவும், திறமையாகவும் நமது நிறுவனத்தை வழிநடத்துக்கூடிய இத்தகைய ஒருவரைத்தான் தேடினேன்’’ என்று முதலாளி சொன்னார்.

இந்தக் கதையைப் படித்தபோது, இதில் இருந்த ‘தனக்கு அடுத்து யார்’ என்கிற கேள்விக்கான தேடல் புதுமையாக இருந்தது. புதிர்களால் ஆனது மனித வாழ்வு. தேடல்தான் அந்தப் புதிர்களை ஒவ்வொன்றாக அவிழ்க்கிறது. தேடல் இல்லாதவர்கள் தேங்கி நின்று போகிறார்கள். தேடல் மிகுந்தவர்கள் புதிய புதிய தரிசனங்களை எப்போதும் கண்டடைகிறார்கள். புதிய புதிய அனுபவங்களைத் தேடுவோம். புதிய புதிய தரிசனங்களைக் கண்டடைவோம்.

வாழ்க வையகம்...  வாழ்க வளமுடன்!
கே.ஆர்.நாகராஜன்

நிறுவனர் - ராம்ராஜ் காட்டன்

 

Enroll Now to our Newsletter

Get the latest news about our exciting products & initiatives and be always updated about what we do