வணக்கம்.

‘ஆசையில்லாத மனமும் ஓசையில்லாத கடலும் உலகில் இல்லை’ என்பது நம் முன்னோர்கள் கண்டுணர்ந்த அனுபவம். வாழ்க்கை முழுவதும் சிறியதும் பெரியதுமாக ஆசைகள் அலையடித்துக்கொண்டே இருக்கின்றன. கரையில் நின்று கால் நனைத்து மகிழ்ச்சி அடைகிறவரை அலைகளால் எந்தப் பிரச்னையும் இல்லை. நம்முடைய தகுதி அறிந்து, தேவை உணர்ந்து, உழைப்பும் முயற்சியும் கொண்டு அடையும் ஆசைகளே நம் வாழ்வை அழகாக மாற்றுகின்றன. அதேநேரம் பேரலையில் மூழ்காமல் இருப்பதும், பேராசையின் வலையில் சிக்காமல் கவனமாக இருப்பதும் அவசியம். 

சுயநலம் மிகுந்த ஆசைகள் பற்றிய நகைச்சுவையான ஒரு கதை உண்டு. ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் மேனேஜர், சூப்பர்வைசர், விற்பனைப் பிரதிநிதி ஆகிய மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். ‘‘எத்தனை கடைகளில் ஏறி இறங்கினாலும் பெரிய அளவில் ஆர்டரே கிடைப்பதில்லை’’ என்று சலித்துக்கொண்டார் விற்பனைப் பிரதிநிதி. ‘‘இங்கே யாருமே ஒழுங்கா வேலை செய்யறதில்லை. ஏன் வேலை செய்யலைன்னு கேட்டா ஆயிரம் காரணங்கள் சொல்றாங்க. செய்ய முடியும்ங்கிறதுக்கு ஒரு காரணம் சொல்ல மாட்றாங்க. வேலையே வாங்க முடியவில்லை’’ என்று புலம்பினார் சூப்பர்வைசர். ‘‘வேலை செய்யவே தெரியாத உங்களையெல்லாம் வச்சிக்கிட்டு நான் என்ன செய்யப் போறேனோ?’’ என்று மேனேஜர் அந்த இருவரையும் வெளுத்து வாங்கினார்.

ஆதங்கத்தோடு இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென ஒரு பூதம் அவர்கள் முன் தோன்றியது. ‘‘ஏன் இப்படி கஷ்டப்பட்டு வாழ்கிறீர்கள். உங்கள் ஆசையைச் சொல்லுங்கள். உடனே நான் நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஆளுக்கு ஓர் ஆசை மட்டும்தான்’’ என்றது. பூதத்தைப் பார்த்ததும், ‘‘நீ எப்படி அலுவலகத்திற்குள் அனுமதி இல்லாமல் வந்தாய். செக்யூரிட்டி தூங்குறானா?’’ என்று கோபப்பட்டார் மேனேஜர். ‘‘அவர் லண்டனைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அனுப்பி வைத்திருக்கிறேன்’’ என்று பூதம் சொன்னதும் மூவரும் அதிர்ந்து போயினர்.

சூப்பர்வைசர்தான் முதலில் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டவர். ‘‘ஆசையை நிறைவேற்றும் பூதம் சார். நாமும் கேட்டுப் பார்ப்போம்’’ என்று சொன்ன அவர், கையோடு தன் ஆசையை வெளிப்படுத்தினார். ‘‘இங்கே ஒரே வெயிலாக இருக்கிறது. நான் அமெரிக்காவுக்குப் போகவேண்டும். நயாகரா அருவியின் முன்னால் ஆனந்தமாக இருக்க வேண்டும்’’ என்று அவர் கேட்டதும், உடனடியாக அவரை நயாகரா அருவி முன்னால் நிறுத்தியது பூதம். அடுத்து விற்பனைப் பிரதிநிதி, ‘‘எனக்கு வேலைசெய்து அலுத்துவிட்டது. நான் மாலத்தீவில் ஒரு பங்களாவில் வாழ வேண்டும். அங்கு எனக்கு வேலை செய்ய பணியாளர்கள் வேண்டும்’’ என்று கேட்டார். அவர் கேட்டபடியே நடந்தது.

அடுத்ததாகத் தன் ஆசையைச் சொன்னவர் மேனேஜர். எல்லோரும் மாயமானதால் கடும் கோபத்தில் இருந்த அவர், ‘‘அடுத்த வாரம் எம்.டி., மீட்டிங் இருக்கு. இவங்க ரெண்டு பேரும் இப்படி ஜாலியா ஊர் சுத்தப் போயிட்டா யாரு இங்க வேலை செய்றது? என் நிம்மதி காணாமப் போயிடும். அவங்க ரெண்டு பேரும் மட்டுமில்லாம, அந்த செக்யூரிட்டியும் உடனே இங்க இருக்கணும்’’ என்று தன் கறாரான ஆசையை வெளிப்படுத்தினார். அதிர்ச்சியான பூதம் அப்படியே செய்துவிட்டு மாயமானது. ‘மூவரும் பழையபடி அதே அலுவலகத்தில் இருந்தனர்’ என்று கதை முடியும்.

நகைச்சுவைக்காகச் சொல்லப்படும் கதைதான். ஆனால், இதில் அனைவரும்  தங்களின் சுயநலமான ஆசையை மட்டும்தான் வெளிப்படுத்தினர். குறைந்தபட்சம் தங்கள் குடும்பத்தினரைக்கூட நினைத்துப் பார்க்கவில்லை. ஆசைகளின்றி மனிதன் வாழ இயலாது என்றாலும், அந்த ஆசை என்பது குறுகிய மனப்பான்மையுடன் இருந்துவிடக்கூடாது. எல்லா உணர்வுகளிலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கின்றன. மனித வாழ்விலிருந்து பிரிக்க முடியாத உணர்வு ஆசை.  ‘ஆசைப்பட்டத சாப்பிட முடியல... ஆசைப்பட்டத உடுத்த முடியல... ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கல’ என ஆசை நிறைவேறாத ஏமாற்றம் பலருக்கு வாழ்க்கை முழுவதும் நிழல் போல தொடர்ந்துகொண்டே வருகிறது. ‘ஆசைகள் இல்லாமல் வாழுங்கள்’ என்ற போதனைகள் நடைமுறை வாழ்விற்குப் பொருத்தமற்றவை. முற்றும் துறந்த ஞானியராக எல்லாரும் மாறிவிடப்போவதில்லை. அது தேவையும் இல்லை. மனித வாழ்வின் இயக்கம் ஆசைகளின் மூலமாகவே தொடர்கிறது.

பல ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் நன்றாகச் சாப்பிட்டு, நன்றாக உடை உடுத்தி, அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்கிற என் ஆசை, ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தைத் தொடங்க வைத்தது. என்னை அதிகம் உழைக்க வைத்தது. தொழிலைக் கண்ணும் கருத்துமாகச் செய்யத் துணைநின்றது. பல ஆயிரக்கணக்கான ராம்ராஜ் காட்டன் ஊழியர்களின் வாழ்வாதாரம் மேலும் சிறக்க வேண்டும் என்கிற ஆசை என்னைத் தொடர்ந்து இயக்குகிறது. ராம்ராஜ் காட்டன் தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் மனநிறைவுடன் வாழ்த்த வேண்டும் என்கிற ஆசை, தொழிலை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் செய்ய வைக்கிறது. சமுதாய வளர்ச்சிக்கு உதவும் ஆசையே, ஓய்வு நேரத்தைச் சமுதாய வளர்ச்சி சார்ந்த பணிகளில் பங்கேற்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டுகிறது. இப்படி நான் நேர்பாதையில் சிறப்பாகப் பயணிக்க இத்தகைய நேர்மறையான ஆசைகளே காரணம். 

மாறாக ‘எப்படியாவது பெரிய பணக்காரனாக வேண்டும்’ என்கிற ஆசை, சுயநலப் பாதையில் அழைத்துச் செல்லும். நீடித்த வளர்ச்சி கிடைக்காது. சிறிது காலத்திற்கு மகிழ்ச்சி கிடைக்கலாம். மனநிறைவும், நிலைத்த மகிழ்ச்சியும் நிச்சயம் கிடைத்திருக்காது. பிறர் வளர்ச்சியில் கவனம் செலுத்தும்போது என்னுடைய வளர்ச்சி நன்றாக இருக்கிறது. என் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொழில் நன்றாக நடக்கிறது. இதுதான் வெற்றியின் ரகசியம்.

மனித வாழ்வில் ஆசை தவிர்க்க இயலாத ஒன்று. ஆசையைச் சரியான வழியில் எதிர்கொள்ளவே நம் மனதிற்குப் பயிற்சி தேவைப்படுகிறது. ‘தன்னை உணரும்’ ஆன்மிகத்தின் வழியே, ஆசைகளை பாசிட்டிவான உணர்வுகளாக மாற்ற இயலும். சுயநலமாக இருந்துவிடாமல், நம்மைச் சுற்றி இருப்பவர்களின் நலனையும் உள்ளடக்கி நாம் ஆசைகளை வடிவமைத்துக்கொண்டாலே போதும்.

‘நான் மட்டும் நன்றாக வாழ்ந்தால் போதும்’ என்று ஆசைப்படாமல், ‘நம்மைச் சுற்றி இருக்கிற எல்லோரும் நன்றாக வாழ வேண்டும்’ என்று நினைக்கத் தொடங்கினால் நாமும் பிறர் வாழ்வில் பங்களிக்கத் தொடங்கிவிடுவோம். வாழ்வில் தன்னலம் மறந்து பிறர் நலம் போற்றும் பக்குவம் பெற, வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஆன்மிகப் பயிற்சிகள் பெரிதும் வழிகாட்டுகின்றன. சரியான ஆன்மிகத் தேடல் இருந்தால், ஆசைகளுக்கு அடிமையாகாமல், சரியாகக் கையாள முடியும். ஆசைகளைப் பாசிட்டிவ் உணர்வாக மாற்றிக்கொள்ளும் வழிமுறைகளைச் சுட்டிக்காட்டுகிறது இம்மாத வெண்மை இதழ். நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறேன்.

வாழ்க வையகம்...  வாழ்க வளமுடன்!

Enroll Now to our Newsletter

Get the latest news about our exciting products & initiatives and be always updated about what we do