மதிப்பிற்குரியவர்களுக்கு...

வணக்கம்.

            உலகின் அதிசயங்கள் ஏழு என்கிறார்கள். அனைவராலும் எல்லா உலக அதிசயங்களையும் நேரில் சென்று பார்க்க இயலாது. ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் அற்புதமான அதிசயமாக அவரவர் உடல் அமைந்திருக்கிறது. அதை நன்கு பராமரித்து, பாதுகாப்பதுதான் நிறைவாழ்வு வாழ்வதற்கான சிறந்த வழி.

            நம் உடல் உறுப்புகளின் இயங்குமுறையை இன்னும் ஆராய்ந்துகொண்டே இருக்கிறது மருத்துவ உலகம். தேவையானவற்றை மட்டுமே ஏற்று, தேவையில்லாத எல்லாவற்றையும் வெளியேற்றுகிற உடலின் நுட்பத்தைக் கண்டு அறிவியல் உலகம் அதிசயித்துக்கொண்டே இருக்கிறது.

            நமது உடல் பற்றிய அறிவியல் தகவல்களைத் தெரிந்துகொள்வதே வியப்பு தருகிறது. அவற்றை அறியும்போது ஒருவித அதிசய உணர்வும், ஆச்சர்யப் பெருமிதமும் சேர்ந்தே உருவாகிறது. நம் கண்களுக்குத் தெரியாத பல ஆயிரம் கோடி செல்கள் ஒன்றிணைந்து இந்த மனித உடலை உருவாக்குகின்றன. 100 பில்லியன் நியூரான்களைக் கொண்டு உருவான நம் மூளையால், ஒரு ட்ரில்லியன் அளவு தகவல்களைச் சேகரிக்க இயலும் என்கிறார்கள். பல சூப்பர் கம்யூட்டர்களைவிட மனித மூளையின் செயல்திறன் மேலானதாக இருக்கிறது.

            127 மில்லியன் விழித்திரை செல்கள் வழியாக, நம்மால் 10 மில்லியன் வெவ்வேறு நிறவேறுபாடுகளைக் காண முடியும் என்கிறது மருத்துவ உலகம். நம் மூக்கில் 1,000 நுகர்வு ஏற்பிகள் உள்ளன. இதன் மூலம் நம்மால் 50 ஆயிரம் வெவ்வேறு வாசனைகளை வேறுபடுத்தி உணர முடியும்.

நம் இதயம் தினசரி சுமார் 1,15,200 முறை துடிக்கிறது. இப்படி துடிக்கிற இதயத்தின் சக்தியை அளவிட்டால், நம்மால் ஒரு டிரக்கை 32 கி.மீ., தூரம் வரை இழுத்துச் செல்ல முடியும் என்கிறார்கள்.

            நம் நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது. ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளைக் கொண்டுள்ளது. அவை நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டிச் சுத்தம் செய்கின்றன. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் 50 டன் அளவிலான உணவைச் சாப்பிடுகிறான். 50 ஆயிரம் லிட்டர் திரவங்களைக் குடிக்கிறான் எனக் கணக்கிடுகிறார்கள்.

            இப்படி நமது உடல் பற்றிய ஆச்சரியத் தகவல்களைச் சொல்லிக்கொண்டே போனால், பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகமாக மாறும். இப்போது சொல்லுங்கள், மனித உடல் என்பது விலைமதிப்பற்றதா, இல்லையா? இந்த உடலைத்தான் நம்மால் முடிந்த அளவு துன்புறுத்துகிறோம். சில ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் பொருளைப் பராமரிக்கிற அளவுகூட உடல்மீது அக்கறை செலுத்த நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

            எந்த ஒரு பொருளையும் நாம் வாங்கும்போது, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு பயனாளர் கையேடு தருவது வழக்கம். அதை எப்படி இயக்குவது என்று அந்தக் கையேட்டைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். எந்த ஒரு விலையுயர்ந்த எலக்ட்ரானிக் கருவியை விடவும் லட்சம் மடங்கு நுணுக்கமான செயல்பாடுகளைக் கொண்டது நம் உடல். ஆனால், இதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று விளக்கும் பயனாளர் கையேட்டுடன் குழந்தைகள் பிறப்பதில்லை. தங்கள் உயிரின் ஆதாரமான உடலை மனிதர்கள் அக்கறையுடன் பராமரிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப்படி எந்தப் பயனாளர் கையேடு உருவாக்கப்படவில்லை.

            உடல் உறுப்புகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே ஒருவரின் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது. நமக்கு வாழ்க்கை முழுவதும் நிரந்தரமாக மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு ஆயுள் முழுவதும் நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். 

            ஒரு பிரபலமான கதை நினைவுக்கு வருகிறது. ஒரு இளைஞன் ஆன்மிகத் துறவி ஒருவரைச் சந்தித்து, தன் கஷ்டங்களைக் கூறி வருத்தப்பட்டான். ‘‘என் அப்பா எனக்கு எதையும் சேர்த்து வைக்கவில்லை. இருந்த வேலையைத் திடீரென பறித்துக்கொண்டார்கள். என் படிப்புக்கேற்ற வேலை ஏதும் கிடைக்கவில்லை. அடுத்த வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறேன். பத்து ரூபாய் கூட என்னிடம் இப்போது இல்லை. அதனால், உறவினர்கள், நண்பர்கள் என யாருமே மதிப்பதில்லை. ஏன் வாழ்கிறோம் என்கிற எண்ணம் அடிக்கடி வருகிறது. நான் கஷ்டத்திலிருந்து மீள வழியே இல்லையா?’’ என்று கேட்டான்.

            ‘‘போதுமான பணம் இருந்தால், உன் கஷ்டங்கள் தீர்ந்துவிடும் இல்லையா?’’ என்று இளைஞனிடம் துறவி கேட்டார். நொடி தயக்கம்கூட இல்லாமல் அவன் வேகமாகத் தலையாட்டினான். ‘‘இப்போதே உனக்குப் பத்தாயிரம் ரூபாய் தருகிறேன். உன் வலது கரத்தை வெட்டிக் கொடுத்துவிடு’’ என்று துறவி கேட்டதும் அவன் அதிர்ச்சியடைந்தான். ‘‘லட்சம் ரூபாய் கொடுத்தாலும் என் சுண்டுவிரலைக்கூட வெட்டித் தரமாட்டேன்’’ என்றான். ‘‘உன் கண்களைத் தானமாகக் கொடுத்தால் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கித் தருகிறேன்’’ என்று சொன்ன துறவியைப் பார்க்கவே அவனுக்கு அச்சமாக இருந்தது.

            இப்படியாக இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் என ஒவ்வோர் உறுப்புக்கும் பல லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி, அவற்றை அளிக்கும்படிக் கேட்டார் துறவி. எல்லாவற்றுக்கும் மறுப்பு சொன்னபடி வியர்த்து நின்ற இளைஞனிடம், ‘‘இவ்வளவு மதிப்பு மிக்க உடலை வைத்துக்கொண்டு, ‘என்னிடம் எதுவுமே இல்லை’ என்று வருத்தப்படுகிறாயே?’’ என்று துறவி கேட்டதாக ஒரு கதை உண்டு. அந்தக் கேள்வியை நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்பதாகவே தோன்றுகிறது. உடலின் ஒவ்வோர் உறுப்பும் நம் உயிரை நிலைநிறுத்த உழைக்கிற உழைப்பை எதனோடும் ஒப்பிடவே முடியாது. இந்த வாழ்வியல் உண்மையை அறிந்த நம் ஒளவையார், ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, அதனினும் அரிது கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது’ என்று கூறினார். 

            அதிசயங்களின் அதிசயமாக விளங்குகிறது நம் உடல். நம் உடல் உறுப்புகளின் முக்கியத்துவம் பற்றியும், அவற்றின் செயல்திறன் பற்றியும் நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். உடலில் எந்த உறுப்பு எங்கே இருக்கிறது, எப்படி இருக்கிறது, அது எப்படி இயங்குகிறது, அதன் தனித்தன்மை என்ன, அதை எந்தப் பாதிப்பும் ஏற்படாதபடி எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று எல்லாம் தெரிந்து வைத்திருப்பது நம்மை ஆரோக்கியமாக வாழவைக்க உதவும். இந்த எல்லாவற்றுக்கும் இம்மாத வெண்மை எண்ணங்கள் இதழ் வழிகாட்டுகிறது.

            உழைக்கும் அனைவருக்கும் உடலே மூலதனம். உடலின் முக்கியத்துவம் அறிந்து செயல்பட்டால் மட்டுமே மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வாழ முடியும். உடலைப் போற்றுவோம், உன்னத வாழ்வை வாழ்வோம்.

வாழ்க வையகம்...  வாழ்க வளமுடன்!

கே.ஆர்.நாகராஜன்

நிறுவனர் - ராம்ராஜ் காட்டன்

Newsletter

A short sentence describing what someone will receive by subscribing